இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா, சட்டப்பேரவைத் தலைவர் தனபாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “சென்னையில் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஆந்திர மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர் மற்றும் திருவேற்காடு பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மருத்துவமனைக்கே திருப்பி அனுப்பப்பட்ட உடல் பின்னர் வேறு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதே போன்று நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடாவில் பணியாற்றி, டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்த மருத்துவர் ஜெயமோகனின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய கோவை சிறுமுகை அருகே உள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், சென்னையில் கரோனாவுக்கு உயிரிழந்த புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் உடலை, கீழ்ப்பாக்கம் இடுகாட்டில் அடக்கம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அடக்கம் செய்ய வந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில், கடையநல்லூரில் உறவினர் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு திரும்பிய மேலப்பாளையத்தை சேர்ந்த இஸ்லாமியர்களை அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்க மாவட்ட ஆட்சியர் முடிவு செய்த போது, அதற்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா மக்களை திரட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவராக உள்ள பூங்கோதை ஆலடி அருணா இது போன்ற செயலில் ஈடுபடுவது கடும் கண்டனத்துக்குரியது. இறந்தவர் உடலில் இருந்து கரோனா பரவாது என உலக சுகாதார நிறுவனமே அறிவித்துள்ள நிலையில், மரணித்த ஒருவரின் இறுதிச் சடங்குக்கு சென்று வந்தவர்களை ஊருக்குள் அனுமதிக்காமல் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய பூங்கோதையின் செயல் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே பூங்கோதை ஆலடி அருணாவின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பேரவைத் தலைவர் தனபால் பறிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் பூங்கோதையை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் குணம்