சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு மார்கழி மாதம் திருவெம்பாவை விழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
திருவெம்பாவை விழா நடைபெறும் பத்து நாட்களிலும் திருமுறைகள் திருக்காப்பு செய்யப்படும். விழாவின் பத்து நாட்களிலும் சுவாமி தீபாரதனைகளின் போது திருவெம்பாவை மட்டுமே பாடப்படுவது மரபு.
இவ்வாண்டு திருவெம்பாவை விழா கடந்த 9ஆம் தேதி வியாழக்கிழமை அன்று துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஓவ்வொரு நாளும் காலை நேரங்களில் மாணிக்கவாசகர் புறப்பாடு செய்யப்பட்டது. அப்போது மரபுபடி மாணிக்கவாசகர் அருளி செய்த திருவெம்பாவை பாடல்கள் இசைக்கப்பட்டது.
திருவெம்பாவை விழாவின் 8, 9 மற்றும் 10ஆம் நாள் ஆகிய மூன்று நாட்களிலும் இரவு பொற்றாப்பு விழா (பொன் ஊஞ்சல் விழா) நடைபெற்றது. இந்த மூன்று நாட்களிலும் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது.
திருவெம்பாவை விழாவின் நிறைவாக 11ஆம் நாள் காலை நடராஜ பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அதிகாலை 5 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிறைவு செய்யப்படும். நடராஜர் ஆரூத்ரா தரிசனம் முடிவுற்றபின்னர் திருமுறை வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும்.
ஆருத்ரா தரிசனத்தில் அமைச்சர்
இந்நிலையில், திருவாதிரை நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆருத்ரா தரிசன விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
இதையும் படிங்க:எச்சரிக்கை மக்களே! ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மூட்டுநோய்களுக்கு முக்கிய காரணமாம்!