கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ தொடர்வண்டி தலைமையகத்தில், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் இன்று ஆய்வுமேற்கொண்டார். அப்போது அவர், மெட்ரோ தொடர்வண்டித் துறை அலுவலர்களுடன் மெட்ரோ முதற்கட்ட வழித்தடம் தொடர்பாகவும், முதற்கட்ட விரிவாக்கப் பணி தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார்.
வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ தொடர்வண்டி முதற்கட்ட விரிவாக்கப் பணி நடைபெற்றுவருகிறது. இது வரும் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை விரைந்து முடிக்குமாறு அவர் அலுவலர்களைக் கேட்டுக்கொண்டார்.
மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ தொடர்வண்டி திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்தும் அவர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மெட்ரோ தொடர்வண்டி சேவையின் இணைப்பு சீருந்துகள் (கேப்) குறித்தும் அமைச்சர் எம்.சி. சம்பத் ஆய்வுக் கூட்டத்தில் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆய்வின்போது சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல் உள்ளிட்ட உயரலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 'தேர்வில் முறைகேடு இனி நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் ஜெயக்குமார் உறுதி