சித்த மருத்துவ விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, 11 மூலிகைகள் அடங்கிய சஞ்சீவினி பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மூலிகைச் செடிகளை பார்வையிட்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழ்நாடு அரசு சித்த மருத்துவத்தில் சிறப்பாக செயல்படுகிறது எனப் பாராட்டினார். 1,473 ஆண்டுகளுக்கு முன்னர் அகத்தியர் பிறந்த நாளில், இவ்விழா கொண்டாடப்படுகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் திட்டமிட்டபடி நடந்துவருகிறது. தாமதம் ஏதும் இல்லை. புதிதாக வரவுள்ள மருத்துவக் கல்லூரிகள் பணிகளும் முழு வேகத்தில் சென்றுகொண்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைப் பணியிடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். ’அம்மா பேபி கேர்’ திட்டம் தெலங்கானாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது நமக்கு கிடைத்தப் பெருமை. மருத்துவப் பணியிடங்கள் முறையாக மட்டுமே நிரப்பப்படும். அதற்கு மாறாக கௌரவ அடிப்படையில் மருத்துவர்கள் நியமனம் என்பது தவறான தகவல் ” என்றார்.
இதையும் படிங்க: அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்: முதலமைச்சர் தொடங்கிவைப்பு