சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற 16ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சராக மு.க. ஸ்டாலின், 33 அமைச்சர்கள் ஆகியோருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மே 7ஆம் தேதி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை (மே 11) கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் அனைவரும் பதவி ஏற்று, உறுதிமொழி ஏற்க இருக்கின்றனர்.
இதன்பெயரில், மரபுப்படி தற்காலிக சபாநாயகராக கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் இன்று உறுதிமொழி ஏற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, நாளை நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில், தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலையில் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொள்கின்றனர். மேலும், நாளைய தினமே சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, நாளை மறுநாள் (மே 12) சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தல்!