குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தி.மு.க உள்ளிட்டக் கட்சிகள் டிசம்பர் 23ஆம் தேதி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. முன்னதாக இதற்கு தடை கோரிய வழக்கில் கருத்துத் தெரிவித்திருந்த உயர்நீதிமன்றம், காவல்துறையின் தடையை மீறி பேரணி நடக்கும் பட்சத்தில், அதை முழுவதுமாக ஒளிப்பதிவு செய்து சமர்பிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு மீண்டும் இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பி.டி ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பேரணியில் எடுக்கப்பட்ட ஒளிப்பதிவுக் காட்சிகள் முழுவதுமாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
காவல் துறை சார்பில் முன்னிலையான அரசு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன், காவல் துறையின் தடையை மீறி பேரணி சென்றதற்காக எழும்பூர் காவல் நிலையத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 14,125 பேர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அரசு உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டு, முதல் தகவல் அறிக்கையின்படி விசாரணை நடைபெற்று வருவதாக எடுத்துரைத்தார். மேலும், காவல்துறை விழிப்புடன் செயல்பட்டதால், பேரணியில் கலவரம் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
காவல் துறையின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பேரணிக்கு எதிரான வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பேரணி!