சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அந்த உத்தரவில், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அலுவலர்கள், பதவி உயர்வு செய்யப்பட்ட ஐபிஎஸ் அலுவர்களுக்கான விவரங்கள்:
பணியிட மாற்றம் பெற்றவர்கள்
அமலாக்கப்பிரிவு சிறப்பு டிஜிபியாக இருந்த கரண் சின்ஹா, தீயணைப்பு துறை டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக ஏ.கே. விஸ்வநாதனும், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு கூடுதல் டிஜிபியாக ஆபாஷ் குமாரும், சீமா அகர்வால் சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் டிஜிபியாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக வன்னிய பெருமாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக சந்திப் ராய் ரத்தோர், கடலோர பாதுகாப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக சந்தீப் மிட்டல் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை கணினி மயமாக்கல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை நலப்பிரிவு கூடுதல் டிஜிபியாக சைலேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏடிஜிபியாக பதவி உயர்வு
வடக்குமண்டல ஐஜியாக இருந்த சங்கர், காவல்துறை தலைமையிட கூடுதல் டிஜியாகவும், ஐஜி அமல்ராஜ் செயலாக்க பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், ஐஜி ஜெயராம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய கூடுதல் டிஜிபியாகவும் பதிவு உயர்வு பெற்றுள்ளனர்.
பணியிட மாற்றத்திற்கான காரணம்
பள்ளி மாணவிகள் பலர் அடுத்தடுத்து பாலியல் தொந்தரவு குறித்தான புகார்களை பதிவிட்டு வருவது தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் புகார்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக அரசு உன்னிப்பாக கவனித்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. இந்த முக்கிய கட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக வன்னிய பெருமாளை அரசு நியமனம் செய்துள்ளது.
அதே போல், கடந்த இரண்டு வருடங்களாக கரோனா பணியில் காவலர்கள் அயராமல் உழைத்து வருவதால் 94க்கும் மேற்பட்ட காவலர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். காவலர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி வருவதாக ஆர்வலர்கள் பலர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், காவல்துறை நலப்பிரிவு கூடுதல் டிஜிபியாக சைலேஷ் குமாரை அரசு நியமித்து உள்ளது.
காவலர்கள் பணிப்புரியக்கூடிய காவல் நிலையம், அலுவலகம் போன்ற இடங்களின் கட்டமைப்பு குறித்து அதிகளவிலான கேள்விகள் எழுந்து வருவதால், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக ஏ.கே. விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சைலேந்திர பாபு ரயில்வே துறை டிஜிபியாகவும், கூடுதலாக தீயணைப்பு மீட்பு பணிகள் துறை என இரண்டு பொறுப்பை கவனித்து வந்த நிலையில், தற்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை பொறுப்பை கரண் சின்ஹாவிற்கு வழங்கியுள்ளனர்.
காவலர்கள் இரு வருடமாக கரோனா பணிகளில் ஈடுபட்டு வருவதால் அதிக பணிச்சுமைக்கு ஆளாகி மன உளைச்சல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், தலைமையிடம் கூடுதல் டிஜிபியாக சங்கர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆ. ராசா மனைவி உயிரிழந்ததாக பரவும் வதந்தி: உண்மை என்ன?