தமிழ்நாட்டில் செங்கல் சூளை, அரிசி ஆலை உள்ளிட்ட இடங்களில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் பரம்பரையாக வாழ்ந்துவருகின்றனர். கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் 1976 ஆம் ஆண்டின்படி, கொத்தடிமை முறை தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆங்காங்கே கொத்தடிமைகளாக இருப்பவர்கள் மீட்கப்பட்டுவருகின்றனர். 2018 டிசம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்பட 3.13 லட்சம் கொத்தடிமைகள் நாடு முழுவதும் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொத்தடிமை முறையை ஒழிக்கவும், கொத்தடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும் 2016ஆம் ஆண்டு முதல் கொத்தடிமை மறுவாழ்வுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. இதன்படி கொத்தடிமைகளை அடையாளம் காண்பதற்காக மாவட்டந்தோறும் 4.5 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கொத்தடிமை கணக்கெடுப்பு நடத்த 49.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, நாமக்கல், தஞ்சாவூர், கடலூர், கோயம்புத்தூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
1996ஆம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பில் சுமார் 25 ஆயிரம் கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதன்பிறகு, 24 ஆண்டுகள் கழித்து இந்தக் கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு நடத்துகிறது.
இது குறித்து தொழிலாளர் துறை அலுவலர்கள் தரப்பிடம் கேட்டபோது, கணக்கெடுப்புக்கு 50 விழுக்காடு பணத்தை மத்திய அரசு விரைவில் வழங்க உள்ளது என்றும், மீதமுள்ள பணத்தை தமிழ்நாடு அரசு செலுத்தி பின்னர் மத்திய அரசிடம் வசூலித்துக் கொள்ளும் என்றனர்.
தற்போது கணக்கெடுப்புக்கான கேள்விகள் தயாரிக்கப்பட்டுவருவதாகவும், மத்திய அரசிடம் நிதி பெற்றவுடன் விரைவில் கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குறைதீர் கூட்டத்தில் கறுப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் கண்டன கோஷம்