கரோனா தொற்று பாதிப்பு காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தனியார் மருத்துவமனைகள், தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்களிடமிருந்து தமிழ்நாடு அரசுக்குப் புகார் வந்தது.
தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று பாதிப்புக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சைக்கு, அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதையடுத்து அரசே சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயிக்க குழு அமைத்துள்ளது.
விரைவில் அந்தக் குழு தனது அறிவிப்பை வெளியிடும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(மே 13) தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான கட்டணத்தை மூன்று வகைகளாகப் பிரித்து தமிழ்நாடு அரசு முதல் கட்டமாக அறிவித்துள்ளது.
அதன்படி தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் முதல் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆயிரத்து 500 ரூபாயும், உயிர் காக்கும் கருவிகள் கொண்ட வசதியுடன் கூடிய தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு 10 கிலோ மீட்டருக்கு 4 ஆயிரம் ரூபாயும் வசூலிக்க கட்டணம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.