இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
- வரும் திங்கட்கிழமை (18.05.2020) முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும்.
- அனைத்து அரசு அலுவலகங்களும் 50 விழுக்காடு ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும்.
- ஊழியர்களை 3 குழுக்களாகப் பிரித்து, வாரத்திற்கு தலா 2 நாட்கள் வீதம் பணியமர்த்த வேண்டும்.
- குரூப் 'ஏ' பணியாளர்களும், அலுவலகத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் வாரத்தின் 6 நாட்களிலும் பணியாற்ற வேண்டும்.
- சுழற்சி முறையிலான பணியின் போது, வீட்டில் இருக்கும் ஊழியர்கள் அலுவலகத்தோடு எப்போதும் தொடர்பில் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- காவல் துறை, சுகாதாரத்துறை, கருவூலத்துறை, மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் ஏற்கெனவே செயல்படும் முறையிலேயே தொடரும்.
மேலும், தலைமைச் செயலகம் முதல் மாவட்ட அரசு அலுவலகங்கள் வரை அனைத்து பணியாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் எனக் கூறியுள்ள அரசு, பணியாளர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் கூறியுள்ளது.
கடந்த 50 நாட்களுக்கும் மேலான ஊரடங்கால், அரசின் சில அத்தியாவசியத் துறைகள் தவிர, ஏனைய பிறத்துறை பணியாளர்கள் அனைவரும் விடுப்பில் இருந்தனர். கடந்த 3 ஆம் தேதியிட்ட உத்தரவில் 33 விழுக்காடு பணியாளர்களை பணிக்கு அழைத்திருந்தது, அரசு. இந்நிலையில் இன்று இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'நடமாடும் கரோனா மையங்கள் அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை' - மத்திய அரசு