2020-2021 ஆம் ஆண்டிற்க்கான கால்நடை பராமரிப்பு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
1. கால்நடைகளுக்கு போதுமான அளவு உணவு கிடைப்பது உறுதி செய்வதற்காக தீவனம், சோளம், காராமணி 29 மற்றும் வேலிமசால் ஆகியவை 12 கோடி ரூபாய் செலவில் 3.20 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
2. பசுந்தீவனம் சாகுபடியில் ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்காக, ரூபாய் 4.80 கோடி மதிப்பீட்டில் 75 சதவிகித மானியத்தில் 2500 விவசாயிகளுக்கு பசுந்தீவனம் அறுவடை செய்யும் கருவிகள் வழங்கப்படும்.
3. கால்நடைகள் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக, 33 மாவட்டங்களில் உள்ள 34 வடிநிலங்களில் 9.37 கோடி செலவில் 40 பால்வள ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு கால்நடை நலப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
4. ஆண்டு முழுவதும் பசுந்தீவனம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆட்டுப் பண்ணையில் ரூபாய் 2.99 கோடி செலவில், 75 ஏக்கர் நிலப்பரப்பில் பழவகைகள், பூக்கள், பயிறு வகைகள், சிற்றின மரங்கள் உள்ளடங்கிய மேய்ச்சல் நிலம் ஏற்படுத்தப்படும்.
5. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலுள்ள கால்நடைகளுக்கு உயர்தர மருத்துவச் சேவைகளை வழங்குவதற்காக ரூபாய் 300 கோடி செலவில் சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
6. நாய்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் கொடிய நோய் தாக்குதலில் இருந்து காக்கும் பொருட்டு நடப்பாண்டில் ரூபாய் 1.67 கோடி செலவில் தற்காப்பு நடவடிக்கையாக நகராட்சிகளில் உள்ள 4 லட்சம் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படும்.
7. மாநிலத்தில் 200 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு நாய்கள் இனவிருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை புத்தாக்க பயிற்சியும், 200 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் மாநகராட்சி நாய் பிடிக்கும் ஊழியர்களுக்கு, நாய் இனங்களைக் கையாளுதல் தொடர்பான பயிற்சியும் ரூபாய் 60 லட்சம் செலவில் வழங்கப்படும்.
8. விலங்கு வழி பரவும் நோய் ஆய்வகம் 2.54 கோடி நிதி ஒதுக்கீட்டில், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஒரத்தநாட்டில் நிறுவப்படும்.
9. புதிய கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையம் ரூபாய் 1.70 கோடி நிதி ஒதுக்கீட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நிறுவப்படும்.
இதையும் படிங்க: ஆறு லட்சம் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்படும் - அரசு தகவல்