தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வரை நடத்துவதற்கு அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடத்துவது மரபாகும். அந்தவகையில் இந்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் கடந்த 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற்றன.
கடந்த 20ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் வருகிற மார்ச் 9ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என்று சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் அறிவித்தார்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அவைத்தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது, எந்தெந்தத் தேதிகளில் எந்தத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெறும் என ஆலோசிக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் துறைகள் மீதான மானியக் கோரிக்கை தொடர்பான சட்டப்பேரவை கூட்டத்தொடரை அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.