தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உற்பத்தி செய்து வழங்கும் மின்சாரத்தின் சராசரி மின் தொடரமைப்பு மற்றும் வணிக இழப்புகள் தற்போது 14 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. இவற்றை மேலும் குறைப்பதற்கு, பகிர்மான மின் மாற்றிகளில் மீட்டர்கள் பொருத்தி முழுமையாக மின்சார இழப்புகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
தமிழ்நாடு முழுவதும், 4 லட்சம் மீட்டர்கள் பொருத்த 1200 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை உடனடியாக வழங்கக்கோரி, மத்திய மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கை, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமை செயலர் விக்ரம் கபூர் ஆகியோர் இன்று நேரில் சந்தித்தனர்.
பின்னர் இதுகுறித்து பேசிய தமிழ்நாடு மின்துறை அமைச்சர் தங்கமணி, ” தற்போது தமிழ்நாட்டில் வழங்கப்படும் மின்சாரத்திற்கான தொகை 98 விழுக்காடு வசூல் செய்யப்பட்டுவருகிறது. இது தவிர அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை 3 மாதங்களில் செலுத்தவேண்டும் என தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மின்சார பயன்பாட்டினை துல்லியமாக கண்காணிப்பதற்கு வசதியாக, ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் 1.4 லட்சம் ஸ்மார்ட்
மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து மீட்டர்களும், ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றி அமைக்கப்படும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மத்தியத் தொகுப்பிலிருந்து 6000 மெகாவாட் மின்சாரம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது குறைவான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் பற்றாக்குறையை சமாளிக்க தனியார் மற்றும் வெளிசந்தையிலிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது ” என்றார்.
இதையும் படிங்க: புதிய நிறுவனங்கள் தொடங்க அனுமதி - முதலமைச்சர் ஆலோசனை