சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய சட்டப்பேரவைக் காங்கிரஸ் தலைவர் ராமசாமி, ஆசிரியர் தேர்வு வாரியம், நீட் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி எனத் தொடர்ந்து தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தில் அரசின் தலையீடு இல்லை எனவும், தவறு நடைபெற்றது தெரிந்தவுடன் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உட்படுத்தி வெளிப்படைத் தன்மையோடு விசாரித்து 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுவே வேறு ஆட்சியாக இருந்திருந்தால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்திருப்பார்கள் எனவும் சாடினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காங்கிரஸ் காரர்கள் என்றுமே பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்குக்கு விலை சொல்லக்கூடியவர்கள் எனப் பேரறிஞர் அண்ணா கூறியதை சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதிலளித்த ராமசாமி, அமைச்சர்கள் என்ன சொன்னாலும் எங்களை திசைத் திருப்ப முடியாது என்றும், நாங்கள் எங்கள் ’பிளான்’ படி தொடர்ந்து செயல்படுவோம் எனவும் கூறினார். உடனே குறிக்கிட்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ராமசாமி கூறியது உண்மைதான் , 1967ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை இழந்த பிறகு இன்றளவும் காங்கிரஸ் கட்சி திசைத்திருப்பப்படாமல்தான் உள்ளது எனக் கூறியதும் அவையில் பலத்த சிரிப்பலை எழுந்தது.
இதையும் படிங்க: 'கருத்தடை சிகிச்சை செய்ய ஆண்களும் முன்வரவேண்டும்' - அமைச்சர் விஜயபாஸ்கர் அழைப்பு