சென்னை: அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரமில் இருந்து வந்த தலா ஒருவர் உட்படத் தமிழ்நாட்டில் 30 பேருக்கு புதிதாகக் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரகம் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
‘தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 13 ஆயிரத்து 437 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 28 பேருக்கும், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவர் என 30 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் 6 கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 13 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 34 லட்சத்து 53 ஆயிரத்து 320 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அடைந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 235 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழப்பு இல்லை : மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 27 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 60 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் சிகிச்சை பலனின்றி இறக்கவில்லை.
சென்னையில் 17 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 5 நபர்களுக்கும், வேலூர் திருவள்ளூர் மாவட்டத்தில் தல இரண்டு நபர்களுக்கும், கோயம்புத்தூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 30 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரமில் இருந்து வந்த இரண்டு நபர்களும் வேலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:இந்தியாவில் தற்போதைய கரோனா நிலவரம்