சோனியா காந்தி மகளிர் பேரவை சார்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, சமத்துவப் பொங்கல் என்பதே பொங்கல் விழாவின் முக்கியத்துவம். சமூகத்தில் அநீதி, நீதி என்று எப்போதும் இருந்து வருகிறது. மகாத்மா காந்தி இந்திய அரசியலுக்கு வந்த பிறகுதான் சமூகநீதி இம்மண்ணில் அதிகரித்தது. ஆனால், இதற்கு அநீதி இழைக்கும் விதத்தில், பாஜக செயல்பட்டு மக்களை பிரித்து பார்க்க முயற்சிக்கிறது என்றார்.
திமுக கூட்டணி பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நேற்றைய அறிக்கை நேற்றோடு முடிந்துவிட்டது எனத் தெரிவித்த அவர், திமுகவுடன் எங்களின் உறவு நன்றாக உள்ளது, எப்பொழுதும் போல் நட்பு தொடர்கிறது என்றார். மேலும், திமுக கூட்டணியில் இருந்து விலகவில்லை எனவும் அழகிரி தெளிவுப்படுத்தினார். திமுக உடனான கூட்டணி ஓரிரு இடங்களுக்கானது அல்ல என்றும், இது கொள்கை ரீதியான கூட்டணி எனவும் அவர் தெரிவித்தார்.
தனிப்பட்ட முறையில் எந்த வருத்தமும் எனக்கு இல்லை என்ற அழகிரியிடம் செய்தியாளர்கள், அறிக்கையில் வருத்தம் இருப்பதாக தெரிவித்துள்ளீர்களே என்றதற்கு, வாழ்க்கையில் வருத்தம் இல்லாத மனிதன் நான் எனத் தெரிவத்தார். அப்போது அறிக்கையில் உள்ளது போலியா என்ற செய்தியாளர்களிடம், எதுவுமே போலி இல்லை, எதிலும் உண்மை இல்லை, எதிலும் உண்மை இல்லாமலும் இல்லை என மழுப்பலான பதில்களாகவே கூறினார்.
இதையும் படிங்க: ’ஒரு இரவுக்குள் திமுக உரிய இடங்களை ஒதுக்க வேண்டும்’ - எச்சரிக்கை விடுக்கிறாரா சிதம்பரம்