திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
திருவள்ளுவர் விருது தமிழறிஞர் நித்யானந்த பாரதிக்கும், முனைவர் ப. சிவராஜிக்கு மகாகவி பாரதியார் விருதும், தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கும் அளிக்கப்பட்டது. மேலும், ஒன்பது பேருக்கு திருவள்ளுவர் திருநாள் விருதும்,13 பேருக்கு சித்திரை தமிழ் புத்தாண்டு விருதும், 10 பேருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதும், 3 பேருக்கு உலகத் தமிழ்ச்சங்க விருதும் முதலமைச்சர் வழங்கினார். விருதாளர்களுக்கு, காசோலை, ரொக்கப் பரிசு, தங்கப்பதக்கம் உள்ளிட்டவையும் முதலமைச்சரால் வழங்கப்பட்டன.
விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், ” உலகிற்கு மூத்த மொழி தமிழ், உலகிற்கு முன்மாதிரியான பண்பாடு தமிழர் பண்பாடு. தமிழ் மொழியின் அடையாளமாக இருப்பது திருக்குறள். திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில், திருவள்ளுவர் ஆண்டு 1981ஆம் ஆண்டில் உலகத் தமிழ் மாநாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. வெளிநாட்டவரும் திருக்குறளை தெரிந்துகொள்ள உலக மற்றும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழ் இருக்கை அமைக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது “ என்றார்.
நிறைவாக பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ உலகின் மிகவும் தொன்மையான மொழி தமிழ். தமிழ் மொழியை சிறப்பிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. தமிழ் மொழிக்கு வழங்கப்படும் விருதாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழில் உள்ள சொற்களை ஒரே தளத்தில் பார்க்கும் வகையில் சொற்குவை திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது ” என்றார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாள்: ஏழைகளுக்கு உதவிட ஓபிஎஸ்-ஈபிஎஸ் வேண்டுகோள்!