சென்னை தரமணியில், டிஎல்ஃஎப் நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்துடன் இணைந்து செயல்படுத்தும் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திட்ட மாதிரியையும் அவர் திறந்துவைத்தார். தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்திருக்கும் தரமணி பகுதியில், 5,000 கோடி ரூபாய் மதிப்பில், 68 லட்சம் சதுர அடி பரப்பளவில், பல அடுக்குகள் கொண்ட ஒருங்கிணைந்த நவீன அலுவலகங்களைக் கட்ட டிஎல்ஃஎப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”அரசின் தொடர் முயற்சியால், இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்ட ஓராண்டுக்குள் 53 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக 213 திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கான வேலைகள் நடக்கின்றன. இதுவரை 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 83 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன” என்றார்.
இதனையடுத்து பேசிய டிஎல்ஃஎப் நிறுவன தலைமை செயல் அதிகாரி மோஹித் குஜ்ரால், தொழில் நடத்த சாதகமான சூழ்நிலை மற்றும் அறிவாற்றல் கொண்ட தொழிலாளர்களால் முதலீட்டாளர்கள் எப்போதும் தமிழ்நாட்டை தேர்வு செய்வதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: துணை முதலமைச்சர் தலைமையில் பெருநகர வளர்ச்சிக் குழுமக் கூட்டம்