நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்து டிச. 31ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால், கட்சி ஆரம்பிக்கப்போவது இல்லை என்று மூன்று பக்க அறிக்கையை டிச.29ஆம் தேதி வெளியிட்டு ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
தனது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதில், 'கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்' எனக் கூறியிருந்தார்.
ராமருக்கு அணில்போல் ரஜினிக்கு நான்
ராமருக்கு அணில்போல் ரஜினிகாந்துக்கு நான் இருப்பேன் என்றும் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்று அரசியலை முன்னிறுத்தி திராவிடக் கட்சிகளிடமிருந்து தமிழ்நாட்டை விடுவிக்கும் அந்தச் சரித்திர சாதனையை ரஜினிகாந்தால் மட்டுமே நிகழ்த்திக் காட்ட முடியும் என்று கூறிய தமிழருவி மணியனை, ரஜினி தான் ஆரம்பிக்காத கட்சிக்கு மேற்பார்வையாளராக நியமித்தார்.
இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை
காந்தி, காமராஜர் கனவுகளை நனவாக்க அரசியல் களத்தில் அடியெடுத்துவைக்கும் ரஜினிகாந்தை முதலமைச்சராக்க உழைப்போம் என்று கூறிய காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன், ரஜினியின் இந்தத் திடீர் முடிவின் காரணமாக, "இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன், திமுகவிலிருந்து விலகும்போது கண்ணதாசன் போய்வருகிறேன் என்றார். நான் போகிறேன்; வரமாட்டேன்" என்று கூறி அறிக்கை வெளியிட்டு 12 நாள்களில் தமிழருவி மணியனின் அரசியல் துறவறம் பேச்சு வழக்கம்போல நீறுபூத்த நெருப்பாக மீண்டும் எரியத் தொடங்கியுள்ளது.
காந்திய மக்கள் இயக்கம் - ரஜினி மக்கள் மன்றம் இணைப்பு
காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பதாக நேற்று (ஜன. 10) தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்து காந்திய மக்கள் இயக்கம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பா. குமரய்யா விடுத்துள்ள அறிக்கையில், "காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், கோவை மாவட்ட இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் 37 வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த 85 நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தமிழருவி 'மணியன்' அரசியல் என்ட்ரி 2.0
இந்தக் கூட்டத்தில் தமிழருவி மணியன் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார். இந்தக் கூட்டம், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராகத் தமிழருவி மணியன் அவர்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.
அதன் அடிப்படையில் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராகத் தமிழருவி மணியன் தொடர்கிறார். காந்திய மக்கள் இயக்கத்தின் அன்றாடச் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் இயக்கத்தின் மாநிலச் செயல்தலைவராக கோவையைச் சேர்ந்த டாக்டர் டென்னிஸ் கோவில் பிள்ளை அவர்களும், மாநிலத் துணைத் தலைவராக ஓகே டெக்ஸ் கந்தசாமி அவர்களும், மாநிலப் பொதுச் செயலாளராக குமரய்யா அவர்களும் மாநிலப் பொருளாளராக நாகராஜன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரஜினியுடன் சகோதர பாசம்
காந்திய மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை மூன்று லட்சத்திலிருந்து 10 லட்சமாக, அடுத்த ஆறு மாதங்களில் உயர்த்துவதற்கான களப்பணியை இந்த நிர்வாகக் குழு முனைப்புடன் செயல்படுத்தும்.
நேற்று இரவு சில செய்தி காட்சி ஊடகங்களில், காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பதாக வந்த செய்தி கற்பனையானது. காந்திய மக்கள் இயக்கம் தனித்து இயங்கும். ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கத்தின் தொடர்பு, சகோதர பாசத்துடன் நீடிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நா எப்ப வருவேன் எப்படி வருவேனு யாருக்கும் தெரியாது! ஆனா வருவேன்...
ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து பின்வாங்கிய பிறகு இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் எனச் சொன்ன தமிழருவி மணியன் மீண்டும் தனது காந்திய மக்கள் இயக்கப் பணிகளை கோவையிலிருந்து தொடங்கியிருப்பது அரசியலில் அவர் மீதான விமர்சனத்தை வலுவாக உறுதிசெய்துள்ளது.
இதையும் படிங்க: அரசியலுக்கு வரப்போவதில்லை - ரஜினி திட்டவட்டம்!