உலகில் வாழும் மொழிகளில் தொன்மையானது நம் தமிழ்! தமிழ் நாகரிகம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. கல்தோன்றி மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்குடி. உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகிய இலக்கணங்கள் உண்டு.
ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்றனர். நம் தமிழ் மொழிக்கு 16 பண்புகள் உள்ளதாக தேவநேய பாவணார் பட்டியலிட்டுள்ளார். அவை தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை ஆகியன ஆகும்.
தமிழ் என்னும் இனிமை
'இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’ என்கிறது பிங்கலந்தை என்னும் நிகண்டு நூல். ‘தமிழ்’ என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். பதினெண் கீழ்கணக்கு நூல்கள், பதினெண் மேல்கணக்கு நூல்கள், சிற்றிலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், பக்திப் பாடல்கள் எனத் தமிழின் இலக்கிய, இலக்கண வளத்தை அடுக்கிகொண்டே போகலாம்.
'என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' என்கிறார் திருமூலர்.
'என்றுமுள தென்தமிழ்' என்று புகழ்கிறது கம்பராமாயணம்.
"இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்" என்கிறது தமிழ்விடுதூது.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்" என்கிறார் பாரதியார்.
"தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்குநேர்"என்று மகிழ்கிறார் பாரதிதாசன்.
தமிழ் நம் அடையாளம்
பல சிறப்புகள் உடைய தமிழ்மொழியை செம்மொழியாக அறிவிக்க தமிழ் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும் பலவிதமான போராட்டங்களைக் கையிலெடுத்தனர். 1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் அதற்கு எடுத்துக்காட்டு. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எத்தனையோ தமிழ் ஆர்வலர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர்.
2004ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி இந்திய அரசால் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. திமுக - காங்கிரஸ் கூட்டணி 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த சில நாள்களிலேயே தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
தற்போதைய கீழடி, கொந்தகை, ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் நம் தமிழின் சிறப்புக்கு மேலும் மெருகூட்டிவருகின்றன. ஆனால் இன்றளவும் தமிழ் மொழியைப் புறக்கணித்து இந்தியைத் திணிக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது. மொழியே நம் அடையாளம். அந்த முயற்சிகளுக்கு நாம் முட்டைக்கட்டையிட வேண்டும்.