சென்னை: தமிழர்களின் பாரம்பரிய பொருள்கள் வேளாண் அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்படும் என சட்டப்பேரவை உறுப்பினருக்கு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலளித்து பேசினார்.
வேளாண், கால்நடை, மீன்வளம், பால்வளதுறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன், "தமிழர்களின் பாரம்பரிய அரிசியான 'அக்னி போரா' அரிசியை, துரித உணவிற்கு பதிலாக பயன்படுத்தலாம். அதனால் துரித உணவை தவிர்த்து நலமான உணவு வகைகளை நாம் உட்கொள்ளலாம்.
பள்ளித் தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைத்து நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்யலாம். பனை வெல்லம், கரும்பிலிருந்து நாட்டு வெல்லம் உற்பத்தி செய்ய சிறிய ஆலைகளை தொடங்கி வேலை வாய்ப்பை பெருக்கலாம்.
வசம்பு உற்பத்தியை பெருக்க அரசு முன்வர வேண்டும். பாரம்பரிய நெல் விதைகளை அரசே மானியத்தில் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும்.
கலப்பின பசுக்களுக்கு பதிலாக நாட்டு பசுவை மானியத்தில் வழங்க வேண்டும். வேளாண்மைக்காக அமைக்கப்படும் அருங்காட்சியகத்தில் தமிழர்களின் தொன்மையாக பயன்படுத்திய பொருள்களை காட்சிப்படுத்த வேண்டும்" என்றார்.
இதற்கு பதிலளித்த வேளாண் துறை அமைச்சர், "அவசியம் சட்டப்பேரவை உறுப்பினரின் கோரிக்கையை நிறைவேற்றுவோம். நகரத்து இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். அதை நிறைவேற்றுவோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன், "திருவாரூரில் மத்திய கூட்டுறவு வங்கி வேண்டும், அரசு மருத்துவமனையை புனரமைத்து தர வேண்டும். செவிலியர் கல்லூரி வேண்டும். 30 படுக்கை வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும்" என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.