தமிழர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வடமாநிலத்தவர்களைத் திரும்பப் போக வலியுறுத்தி, தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மத்திய தொடர்வண்டி நிலையம் முன்பாக மனிதச்சுவர் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அதன் தலைவர் பெ. மணியரசன், ஏராளமானோர் கலந்துகொண்டு வெளி மாநிலத்தவர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து காவல் துறையினர் அவர்களைக் கைதுசெய்தனர்.
முன்னதாக இப்போராட்டம் குறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய பெ. மணியரசன், "தமிழ்நாட்டில் தமிழர்கள் ஆதரவற்றவர்களாக வாழ்வுரிமையற்றவர்களாக வாழும் நிலை உள்ளது. மத்திய அரசின் தொழிற்சாலைகள், அலுவலகங்களில் 90 விழுக்காடு வட மாநிலத்தவர்களைத்தான் வேலைக்குச் சேர்க்கிறார்கள்.
கிராமப்புற வங்கிகளில் மேலாளர்கள், எழுத்தர்களாக வட இந்தியர்களைப் பணியமர்த்துகிறார்கள். அவர்கள் தமிழும் பேசுவதில்லை, ஆங்கிலமும் பேசுவதில்லை. மத்திய அரசு இன ஒதுக்கல் கொள்கையை கடைப்பிடிக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசும் துணைபோகிறது.
கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தனியார் வேலைவாய்ப்புகளில் 90 விழுக்காட்டை மண்ணின் மைந்தர்களுக்கு கொடுக்க வேண்டும் எனச் சட்டம் இருக்கிறது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் ஆகியோர் சொந்த மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆனால் தமிழ்நாட்டில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதனால், தமிழக்நாட்டில் 90 விழுக்காடு வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும், 10 விழுக்காடுக்கு மேல் உள்ள வட மாநிலத்தவர்களை வெளியேற்ற வேண்டும்.
அதேபோல், குறைந்த ஊதியம், நீண்ட நேரம் பணியாற்றுகிறார்கள் போன்ற காரணங்களால் உடல் உழைப்புச் சார்ந்த வேலைகளில்கூட வடநாட்டவர்தான் பணியமர்த்தப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் முதலாளிகளாக மாறிவிடுகிறார்கள்.
மார்வாடிகள்தான் தற்போது வணிகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தமிழர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள். தமிழர்கள் தமிழர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், மற்ற மாநிலத்தவர்களுக்கு வேலை கொடுப்பதை, வீட்டை வாடகைக்கு விடுவதை நிறுத்த வேண்டும்.
அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் இன்னர் லைன் பர்மீட் என்ற சட்டம் உள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டிலும் உள் அனுமதிச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். தேசியக் குடிமக்கள் பதிவேட்டைப் போல, தமிழ்நாட்டு குடிமக்கள் பதிவேடு மூலம் 1956 நவம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டிற்குள் வந்தவர்களை வெளியேற்ற வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு - சென்னை ஐஐடியில் பேரணி, போராட்டம்