இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், 'நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவையப் பொறுப்பாளரும், சமகாலத்தில் வாழ்ந்த மாபெரும் தமிழறிஞருமான தமிழொளி ஏகாம்பரம் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரும் அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அத்துயரில் பங்கெடுக்கிறேன்.
வங்கி மேலாளராகத் தம் வாழ்வை தொடங்கியபோதிலும், தமது தணியாத தமிழ் வேட்கையினாலும், தாய்த்தமிழ் மீது கொண்ட அளவு கடந்த பற்றினாலும், அயராத முயற்சியெடுத்து அதீத உழைப்பின் விளைவாக தன்னைத்தானே தமிழறிஞராக வார்த்துக்கொண்டார்.
எத்துறையிலும் பணி செய்தாலும், இனமான கடமையாற்ற, தமிழுக்குத் தொண்டு செய்வதே தனது அருந்தவப்பயனென வாழ்ந்து காட்டினார். நாம் தமிழர் கட்சியின் அரசியல் வரவு குறித்து, “எழுவாய் தமிழா” என்ற புத்தகம் எழுதி ஊக்கப்படுத்தினார். நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவையத்திலும், ஆட்சி மொழிப் பாசறையிலும் பொறுப்பேற்று அவராற்றிய பணிகளென்பது அளப்பரியது; போற்றுதலுக்குரியது.
இனத்தின் நலன் குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்துமே எப்போதும் சிந்தித்து, இயங்கிய பைந்தமிழ் பாவலர் தமிழொளி ஏகாம்பரத்தின் மறைவு, நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமல்ல தமிழ் அறிவுலகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பென்றால் மிகையல்ல" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: “பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு”- கனிமொழி குற்றச்சாட்டு