சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்.19ஆம் தேதி நடைபெற்றது. மொத்தமாக 31 ஆயிரத்து 150 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப். 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக 60.70 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விவரப்பட்டியலில், "தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக மாநகராட்சிகளில் 52.22 விழுக்காடு வாக்குகளும், நகராட்சிகளில் 68.22 விழுக்காடு வாக்குகளும், பேரூராட்சிகளில் 74.68 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தர்மபுரியில் 80.49 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக சென்னையில் 43.59 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு