தமிழ்நாட்டில் செப்டம்பர் 13ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த முகமது ஜான் மறைவைத் தொடர்ந்து அந்த இடம் காலியானது.
இந்த நிலையில், அதனை நிரப்பும்விதமாக தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள மூன்று இடங்களில் ஒரே ஒரு இடத்திற்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது ஜான் கடந்த மார்ச் 23ஆம் தேதி மறைந்தார்.
இவரது பதவிக்காலம் 2025 ஜூலை 24 வரை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காலியிடத்தை நிரப்ப நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவோர் ஆகஸ்ட் 31ஆம் தேதி மனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனுக்கள் செப்டம்பர் 1ஆம் தேதி ஆய்வுசெய்யப்படும்.
வேட்பாளர்கள் மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 3 ஆகும். ஒருவருக்கு மேல் போட்டியிட்டால்தான் இந்தத் தேர்தல் செப்டம்பர் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். மேலும், அன்று மாலை 5 மணிக்கு முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. அப்படி நிகழ்ந்தால் திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரே வெற்றிபெறுவார் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால் வாக்களிக்கும் மக்கள் பிரதிநிதிகள் திமுக கூட்டணியிடமே அதிகம் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. திமுக நிறுத்தும் வேட்பாளர் தவிர வேறு யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்திருந்தனர். இந்த இரண்டு இடங்களுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. அது,
- சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக முகமது ஜான் மறைந்ததால் அந்த இடத்திற்கான தேர்தலைத் தனியாகவும், தேர்தலுக்குப் பின்னர் தங்களது எம்பி பதவியை கே.பி. முனுசாமியும், வைத்திலிங்கமும் ராஜினாமா செய்ததால் அந்த இரு இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலைத் தனியாகவும் நடத்த வேண்டும் என்பதே.
தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பின் மூலம் இது திமுகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. தனது கோரிக்கை மூலம் திமுக ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்துள்ளது என்றேதான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால், மூன்று இடங்களுக்கும் தேர்தலை நடத்துவதாக இருந்திருந்தால் திமுகவுக்கு இரண்டு எம்பி சீட்டுகளும், அதிமுகவுக்கு ஒரு எம்பி சீட்டும் கிடைத்திருக்கும். அதனைத் தவிர்ப்பதற்காகவே ஸ்டாலின் நகர்த்திய ஆடுபுலி ஆட்டம்தான் தற்போது வெற்றிபெற்றிருக்கிறது.
இதையும் படிங்க: இ-எமர்ஜென்சி விசா: இந்தியர்களை மீட்க விரைவு நடவடிக்கை