சென்னை: ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் வேலூர் சிறையிலுள்ள முருகன், 32 நாட்களாக உண்ணாவிரதம் இருப்பதாகவும், அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் அவருக்கு சிகிச்சைக்கு அனுமதியளிக்கக் கோரிய மனுவிற்கு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக முருகனின் மாமியாரும், நளினியின் தாயாருமான பத்மா தாக்கல் செய்துள்ள மனுவில், சிறையில் உள்ள முருகனை அவரது வழக்கறிஞர்கள் அண்மையில் சந்தித்தபோது, அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 32 நாட்களாக உண்ணாவிரதம் இருப்பதால் உடல் எடை குறைந்து பேச முடியாது நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக்கோரி, வேலூர் சிறைத்துறையிடம் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க தமிழ்நாடு அரசு, சிறைத்துறை டி,ஜி,பி., ஐ,ஜி., மற்றும் வேலூர் சிறைத்துறை எஸ்.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு நேற்று (அக்.14) வந்தபோது தமிழ்நாடு காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து பத்மாவின் மனுவுக்கு இரண்டு வாரங்களின் பதிலளிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: முகாந்திரமில்லாமல் குண்டர் சட்டத்தில் கைது... சிறையிலிருந்த ஒவ்வொரு நாளுக்கும் இழப்பீடு வழங்க நேரிடும்... நீதிமன்றம் எச்சரிக்கை...