சென்னை: கடந்த 14ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 15.8 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக டீக்கா ராமன் என்பவரை வேலூர் காவல்துறையினர் கைது செய்து சுடுகாட்டில் மறைத்து வைத்திருந்த தங்கத்தை மீட்டனர்.
இந்த கொள்ளையில் குற்றவாளியை விரைவாக கைது செய்ய முக்கிய பங்காற்றியது சிசிடிவி கேமராக்கள். இதனால் நகைக்கடையினர் எந்த மாதிரியான பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு காவல்துறையினர் விழிப்புணர்வு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நகைக்கடைகள் பின்பற்ற வேண்டியவை
அந்த காணொலியில் கடையை சுற்றி நான்கு புறமும் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், "சிசிடிவி கேமராக்களை மாதம் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். கடையின் முன் மற்றும் பின் பக்கம் போதுமான இரவு காவலர்களை நியமித்து கூர்ந்து கண்காணிக்க வேண்டும்.
கடைகளில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள நகைகளை இரவு நேரத்தில் பாதுகாப்பாக எச்சரிக்கை ஒலியுடன் கூடிய பெட்டகத்தில் வைக்க வேண்டும். காவல்துறையினரால் நடத்தப்படும் கலந்தாய்வு கூடத்தில் கலந்து கொண்டு பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தி கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை தொடர்பாக காவல்துறை செய்தியாளர் சந்திப்பு