சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்தநாள் விழா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் உள்ள, அக்கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தில் இன்று (டிச.26) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், "பொதுவுடைமை இயக்கங்களின் நாடு போற்றும் மூத்த தலைவராக நல்லகண்ணு விளங்கி வருகிறார். அனைத்து தலைவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்கள், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வார்கள். எத்தனையோ போராட்டங்கள், மறியல்கள், கூட்டங்கள், சிறைவாசங்களை கண்டு தொடர்ந்து வெற்றிப் பெற்று கொண்டிருக்கிறோம்.
ஏறக்குறைய 12 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராமசபை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கே எல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள், பேச்சை கேட்கிறார்கள், கட்டுப்பாடுடன் இருக்கிறார்கள்.
இதையெல்லாம் பார்த்து ஆத்திரம் கண்ணை மறைக்க, கிராமசபை என்ற பெயரை பயன்படுத்த தடை என்கின்றனர். அப்படியென்றால் பிரசாரத்திற்கு செல்லும் போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என்று சொல்லக்கூடாது. அவர் அதற்குத் தயாரா?
தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை உருவாக்க போகிறார்கள். கிராமசபை கூட்டத்தில் மக்கள் பெருந்திரளாக வருகிறார்கள், கூட்டம் கூடுவது பெரிதல்ல, அவர்கள் அனைவரும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்கிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க: திமுகவை விரட்டியடிப்போம் எனத் தீர்மானம் போட ரொம்ப நேரம் ஆகாது - கடம்பூர் ராஜூ