இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் முதலமைச்சர் பழனிசாமியின் மனதில் தோன்றியதை எல்லாம் திடீரென அறிவிப்புகளாக வெளியிடுவதால், கரோனா நோய்த் தொற்றை ஆட்சியாளர்களே அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திவிடுவார்களோ என்ற பயம் தமிழ்நாடு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
கரோனா பெருந்தொற்று பாதிக்காமல் இருந்த புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தற்போது நோய் பரவியிருக்கிறது. கரோனா நோய்த் தொற்று சமூகப்பரவல் எனும் மூன்றாவது நிலைக்கு போய்விட்டதாக திருவண்ணாமலை ஆட்சியர் தெரிவித்திருந்தார். ஆனால் தமிழ்நாடு அரசு சார்பில் அது பற்றிய எந்தவிதமான முறையான அறிவிப்போ, எச்சரிக்கையோ பொதுமக்களுக்கு விடுக்கப்படவில்லை.
மாவட்டங்களில் உள்ளூர் நிர்வாகங்கள் அவரவர் நினைத்தபடி செயல்பட்டுக்கொண்டிருக்க, மாநகராட்சிகள் தனி பாதையில் பயணிக்க, எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க வேண்டிய தலைமைச் செயலகமோ ‘எடுத்தோம், கவிழ்த்தோம்’ என முடிவுகளை எடுக்கும் ‘நவீன துக்ளக்’ கூடாரமாக மாறி நிற்பது மக்களிடம் கரோனாவை விட பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
'ஏப்ரல் 26லிருந்து 29ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு' என்று நேற்று முன்தினம் (ஏப்ரல் 24) பிற்பகலில், அதிரிபுதிரியாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இந்த முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தலைமைச் செயலர் தெரிவித்திருந்தார். திடீரென வெளியான இத்தகைய அறிவிப்புகளால் பதற்றமடைந்த மக்கள், அதுவரை கடைபிடித்து வந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் காற்றில் பறக்கவிட்டு கடைகளிலும், சந்தைகளிலும் கூட வேண்டிய நிர்பந்தத்தை அரசு ஏற்படுத்தியது. கடைகளில் விற்பனை நேரம் நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்பைக் கூட மிக தாமதமாக வெளியிட்டதன் மூலம், அரசு நிர்வாகம் எந்தளவுக்கு குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறது என்று ஆட்சியாளர்கள் காண்பித்தனர்.
அதிலும், தமிழ்நாடு அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஏறத்தாழ நான்கில் ஒரு பங்கு பேர் இருக்கும் சென்னையில், நிலைமை மோசமாக இருந்தது. கோயம்பேடு சந்தையில் மட்டும் நேற்று (ஏப்ரல் 25) பல்லாயிரக்கணக்கானோர் கூடினர். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிற மாநகராட்சி பகுதிகளில் உள்ள மளிகை, காய்கறி கடைகளிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக கூடிய காட்சிகள் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஏற்கனவே தேசிய அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட பெருநகரங்களின் பட்டியலில் உள்ள சென்னையில், ஆட்சியாளர்களே கரோனாவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்று விடுவார்களோ என்ற பீதி, இக்காட்சிகளைப் பார்த்த அனைவரிடமும் ஏற்பட்டிருக்கிறது. கோயம்பேடு மட்டுமின்றி திருச்சி உள்பட தமிழ்நாடு முழுவதும் இருக்கிற சந்தைகளில் தனிமனித விலகல் காற்றில் பறக்கவிடப்பட்டதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாதது பெரும் கவலையைத் தந்துள்ளது.
மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத்துறையினர் என பலரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில், இது போன்று சிறுபிள்ளைத்தனமாக தவறுக்கு மேல் தவறுகளைச் செய்யாமல் அரசு நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
முதலமைச்சரும், அவரது அமைச்சர்களும்தான் இப்படி இருக்கிறார்கள் என்றால் அனுபவம் வாய்ந்த ஆட்சிப்பணி அலுவலர்களாவது புரிகிற வகையில் ஆட்சியாளர்களுக்கு எடுத்துக்கூறி சரியான நடவடிக்கைகளை எடுக்கக்கூடாதா என்ற கேள்வி மக்களிடம் எழுந்திருக்கிறது. இனியாவது ஆட்சியாளர்களும், ஆட்சிப்பணி அலுவலர்களும் இதனை மனதில் கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.