முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25ஆம் தேதி, தேசிய நல்லாட்சி தினமாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இதையொட்டி, ஒவ்வொரு மாநிலத்தின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலை மத்திய நிர்வாக சீர்த்திருத்ததுறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
இந்திய அளவில் 18 பெரிய மாநிலங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சிறந்த மாநிலங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பட்டியலில் நிர்வாகத்திறன், பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.
பொது சுகாதாரத்துறையில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாமிடத்தை பிடித்துள்ளதாகவும், கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வணிகம் மற்றும் வர்த்தகத்துறையில் தமிழகம் 14ஆவது இடம் பிடித்துள்ளதாகவும், முதலிடத்தில் ஜார்கண்ட், இரண்டாவது இடத்தில் ஆந்திராவும் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதவள மேம்பாட்டுத்துறையில் தமிழகம் 5ஆம் இடம் பிடித்துள்ளதாகவும், முதலிடத்தில் கோவா, 2வது இடத்தில் பஞ்சாப் இடம்பெற்றுள்ளதாகவும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, பொருளாதார நிர்வாகத்தில் 5ஆவது இடத்திலும், வேளாண்மையில் 9ஆவது இடத்திலும், இடத்திலும் தமிழ்நாடு உள்ளது.
இதையடுத்து முதலமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், விஜயகுமார், செந்தில்குமார், ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: போராட்ட வாழ்க்கை... பொதுவுடைமை வேட்கை... அவர்தான் நல்லகண்ணு!