சென்னை: மத்திய அரசு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்துசெய்துள்ள நிலையில், தமிழ்நாடு எந்த மாதிரியான முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் நேற்று (ஜூன் 3) சமூக வலைதளங்கள் வாயிலாக கல்வித் துறை சார்பில் கருத்துகள் பெறப்பட்டன.
தேர்வை தேர்ந்தெடுக்கும் பெற்றோர்கள்
பெரும்பாலான பெற்றோர்கள் தேர்வை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றனர். அதேபோன்று ஆசிரியர்கள் கல்வியாளர்களின் கருத்தும், தேர்வை நடத்த வேண்டும் என்பதாகவே இருக்கிறது. தேர்விற்காகத் தங்களைத் தயார் செய்துகொண்ட மாணவர்கள் கட்டாயம் தேர்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
விரைவில் அறிவிப்பு
இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று மாலை 4 மணிக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலி கலந்தாய்வு வாயிலாகப் பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
தேர்வு குறித்து பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தெரிவித்த கருத்துகள் குறித்து ஆய்வுசெய்யும் அமைச்சர், தேர்வை நடத்துவதற்கான பணிகள் எந்த அளவிற்குத் தயாராக இருக்கின்றன, தேர்வை நடத்துவதற்கு வாய்ப்புகள் எந்த அளவிற்கு இருக்கின்றன என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு முதலமைச்சரைச் சந்தித்து, ஆலோசனை மேற்கொள்ளும் அமைச்சர், இன்று மாலையே தேர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியப் பாடங்களுக்குத் தேர்வு
மொத்தமுள்ள 6 பாடங்களில் மொழிப் பாடங்களைத் தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய முக்கிய நான்கு படங்களுக்கு மட்டும் தேர்வுகள் நடைபெறலாம், மாணவர்கள் படித்த அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு நடைபெறும், கரோனா தொற்று குறைந்த பிறகு தேர்வு நடத்தப்படும் என இதுபோன்ற முக்கிய அம்சங்கள் அரசின் அறிவிப்பில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி
கூடுதலாக, பொது தேர்வினை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் எத்தனை ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் சேகரித்துவருகின்றனர். மேலும் தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 'நோ வேக்சின்' , 'நோ என்ட்ரி' : ககன் தீப் சிங் பேடி தகவல்