கரோனா பெருந்தொற்று காலத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளானார்கள். மேலும், அவர்கள் குறித்த தெளிவான விவரங்களின்றி மத்திய அரசு கடும் சிரமங்களுக்கு உள்ளானது. இதையடுத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முழுவிவரங்களை வலைதளங்களில் விடுபடாமல் பதிவு செய்ய தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனை செய்யத் தவறும் பட்சத்தில் தொழிற்சாலைகள், கட்டட ஒப்பந்ததாரர்கள், வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, "மாநிலங்களுக்கிடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டம், 1979இன் படி புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணியிலமர்த்தும் அனைத்து வேலையளிப்போரும் பணியமர்த்தப்பட்ட புலம்பெயர்ந்த பணியாளர்களின் முழு விவரங்களை உரிய அலுவலரிடம் (appropriate authority) பதிவு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசால் இதற்கென பிரத்யேகமான வலைதளம் (labour.tn.gov.in/ism) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வலைதளத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்வதை எளிமைப்படுத்தும் வகையில் அனைத்து தொழிற்சாலைகள், கட்டட ஒப்பந்ததாரர்கள், வணிக நிறுவனங்களுக்கு தனியாக
உள்நுழைவு (login) மற்றும் கடவுச் சொல் (password) அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சில வேலையளிப்போர்கள் இதனை சரிவர பதிவு செய்யாமல் இருப்பது தெரிய வருகிறது. எனவே,
உடனடியாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முழுவிவரங்களை மேற்படி வலைதளத்தில் விடுபடாமல் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இதனை செய்யத் தவறும்பட்சத்தில் தொழிற்சாலைகள், கட்டட ஒப்பந்ததாரர்கள், வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.