சென்னை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வுக்கான அரசாணை 354-ன் படி 3 வாரத்திற்குள் ஊதிய உயர்வினை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசிற்கு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில சிறப்பு செயற்குழுக் கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள இந்திய மருத்துவச் சங்கத்தின் அலுவலகத்தில் இன்று (ஜூலை3) நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், 'கடந்த 2009-ல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்து, பின்னர் 2019-ல் வழங்கப்பட வேண்டிய காலம் சார்ந்த பதவி உயர்வை உடனடியாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.
இதுகுறித்து ஏற்கெனவே, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் பேசி வருகிறோம். அரசு மருத்துவர்களுக்கு வரும் 3 வாரத்திற்குள் ஊதிய உயர்வு வழங்கவேண்டும். இது குறித்து விரைவில் முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிட உள்ளோம்.
மேலும், அரசு மருத்துவர்கள் பணியில் இருக்கும்போது இறந்தால் ரூ.1 கோடி வழங்குதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரோனா கால ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. பணி இடமாற்றம் பதவி உயர்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என்கிற கோரிக்கை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அரசு மருத்துவர்களுக்கு 50% உயர்படிப்பில் இட ஒதுக்கீடும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாணை 354-ன் படி, ஊதியப்பட்டை 4 மட்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டி உள்ளது. மேலும் 3 வாரத்திற்குள் வழங்காவிட்டால், அடுத்தகட்டமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள் நடத்தப்படும்’ எனக் கூறினார்.