சென்னை: அறநிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், இத்துறையின் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "சட்டப்படியான உரிமை இல்லாமல் ஆக்கிரமிப்புச் செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வமான வாடகை ஒப்பந்தமின்றி, உரிய வாடகை செலுத்தாமல் ஆக்கிரமிப்பு செய்து, அனுபவித்துவரும் நபர்கள் மீது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள, காவல் நிலையத்தில் முறையாகப் புகார் அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
குற்ற நிகழ்வு குறித்து அறிந்த எந்த நபரும் புகார் மனு அளிக்கலாம். கோயில் நிர்வாகிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு விரைந்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது காவல் துறையில் புகார் மனு அளிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக தனி நபர்களால், காவல் துறையினரிடம் அளிக்கப்படும் புகார் மனுவின் விசாரணைக்குத் தேவையான ஆவணங்களை வழங்க கோயில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Omicron scare: பள்ளி, கல்லூரிகளுக்குப் புதிய கட்டுப்பாடு