தமிழ்நாட்டில் 2,381 அங்கன்வாடி மையங்களில் சோதனை அடிப்படையில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அப்போது எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளில் பணியாற்ற உபரியாக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மாண்ட்டீசேரி பயிற்சி முடித்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்க உத்தரவிட்டுள்ளார்.
இப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், இடைநிலை ஆசிரியர்களை பணியில் அமர்த்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பள்ளித் திறக்கும் நாளில் உடனே பணியில் சேர அறிவுறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.