சென்னை : பூந்தமல்லி ஒன்றியத்திற்குள்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தனர்.
மேலும் அந்த பகுதியில் மக்களை தேடி மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பின்னர் காட்டுப்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்ய இருவரும் சென்றபோது குறுகிய பாதையில் அமைச்சர்களின் கார்கள் வர தாமதம் ஆனதால் சிறிது தூரம் நடந்து சென்றனர்.
பின்னர் அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள்களை மடக்கி மோட்டார் சைக்கிளிலேயே அமைச்சர்கள் இருவரும் பயணம் செய்து முகாம்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து, அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
75 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டிய நிலையில் 8ஆவது தடுப்பூசி முகாம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 886 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 950 முகாம்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பது செலுத்துவது என்ற இலக்கோடு தடுப்பூசி முகாமை தொடங்கி இருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் தவணை போட்டு கொண்டவர்கள் 75 சதவீதமாக உள்ளது. இரண்டாவது தவணை முப்பத்தி மூன்று சதவீதமாக உள்ளது” என்றார். தொடர்ந்து, “வெள்ளப் பாதிப்பு காண கணக்கெடுப்பு நடந்து வருகிறது” எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்த எடப்பாடி பழனிசாமி