சென்னை: ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகம் மற்றும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் இணைந்து கருத்தரங்கம் ஒன்று நேற்று (ஜூலை 30) இணையத்தில் நடத்தியது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு, 13 மாநிலத்தின் கடலோர பாதுகாப்பு துறை அலுவலர்கள், உள்துறை அமைச்சக அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில், அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பீமால் என்.பட்டேல் பேசும்போது, “நேபாள நாட்டின் ஆயிரத்து 800 கிலோ மீட்டர் எல்லை பகுதியை 75 ஆயிரம் பேர் பாதுகாக்கின்றனர். ஆனால், 7ஆயிரத்து 500 கிலோ மீட்டர் எல்லைக் கோட்டை கொண்டுள்ள இந்தியாவிற்கு 12ஆயிரம் பேர் மட்டுமே பாதுகாப்பில் ஈடுபட்டு வருவது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு மீனவர்கள்
பின்னர், பேசிய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, “இந்தியாவிலேயே கடலோர பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கிய மாநிலம் தமிழ்நாடுதான். இதற்காக தனி பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக சுமார் ஆயிரத்து 76 கிலோ மீட்டர் கடலோர பாதுகாப்பில் தமிழ்நாடு மீனவர்கள் தான் கண்கள், காதுகள் போன்று செயல்படுகின்றனர்” என்றார்.
இதில் பேசிய கடலோர பாதுகாப்பு ஏடிஜிபி சந்தீப் மிட்டல், “இதுபோன்ற கருத்தரங்கம் நடத்துவதற்கு முக்கிய நோக்கம், கல்வியாளர்களின் உள்ளீடுகளை பயன்படுத்தி, கடலோர பாதுகாப்பை மேம்படுத்த அமைகிறது” எனத் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கடலோர பகுதிகளில் அசாம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெற்றால் 1093 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நடுக்கடலில் திடீரென தீப்பற்றி எரிந்த படகு: 9 மீனவர்களை காப்பாற்றிய கடலோர காவல் படை