சென்னை: தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையளன்று முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ்நாட்டில் கரோனா தொற்று, ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவல் தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொது மக்கள் நலன் கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜனவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, முன்னர் இருந்தது போலவே முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த முழு ஊரடங்கு நாளில், கடந்த முறை பின்பற்றப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும்.
மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.
மாவட்ட ரயில் நிலையங்களுக்கும், வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும். கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் நிராகரிப்பு: நீதிமன்றத்தில் முறையீடு