சென்னை: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 இடங்களில் மூடப்பட்டுள்ள கடைகளை திறக்க வலியுறுத்தி சென்னை மாநகராட்சி ஆணையரை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சந்தித்து பேசினார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஒன்பது இடங்களில் முழு ஊரடங்கு அடிப்படையில் கடைகள் அடைக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 30) இரவு அறிவித்து சனிக்கிழமை அடைக்கப்பட்டதால், வியாபாரத்தை நம்பி இருந்த வியாபாரிகளுக்கு பல கோடி ரூபாய் இதனால் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மாத இறுதியில் கடைகள் அடைக்கப்பட்டதால், கடையில் வேலை செய்யும் நபர்களுக்கு சரியாக ஊதியம் வழங்க முடியவில்லை, கொடுத்த கடனை வாங்க முடியவில்லை, வாடகை சரியாக கட்ட முடியவில்லை என வியாபாரிகள் தொடர்ந்து தடுமாற்றத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு பட்ஜெட் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கலாகிறது; விவசாயத்திற்குத் தனி பட்ஜெட்
உடனடியாக கடைகளை திறக்க ஆயிரம் வியாபாரிகள் வலியுறுத்தியதால், இன்று ஆணையரை சந்தித்து கடைகளை திறக்க அனுமதிக்குமாறு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தியது.
நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடத்தி நல்ல தகவனை தருவதாக ஆணையர் கூறினார். மூன்றாம் அலை வருவதை தடுப்பதற்காக இது போன்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். கடைகள் திறக்கப்பட்டால் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு குழுவாக சென்று கடைகளை தொடர்ந்து ஆய்வு செய்து கடைகளில் ஏதாவது விதிமீறல்கள் இருந்தால் தண்டனை வழங்க முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் வியாபாரிகளின் துயரத்தை நன்கு அறிந்தவர். எனவே, அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும். இதனால் அனைத்து கடைகளும் திறக்க வலியுறுத்தி நாளை காலை 11 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக ஆணையர் கூறினார்" எனத் தெரிவித்தார்.