சென்னை: அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தமிழ்மாெழி இலக்கிய திறனறிவுத்தேர்வு, அக்டோபர் 15ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களின் தமிழ் மொழித்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத்தேர்வு அக்டோபர் 1ஆம் தேதி நடத்தப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது.
இந்த தகுதித் தேர்வுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகைப்பள்ளிகளில் பயிலும் CBSE/ICSE உட்பட 11ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், இந்தத் தேர்வின் மூலம் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை மூலமாக மாதம் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 9ஆம் தேதி வரையில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்நிலையில், அரசுத்தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு தரப்பில் இருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வுசெய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேரளாவில் தாய்ப்பால் வங்கி திட்டம்... மேலும் 2 மருத்துவமனைகளில் அறிமுகம்...