சென்னை: அரசுப் போட்டித் தேர்வில், தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் ஆக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், இது குறித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி. தியாகராஜன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மனிதவள மேலாண்மைத் துறை சார்பாக வழங்கிய பதில் உரைபடி, தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் ஆக்கப்பட்டு, அதில் 40 விழுக்காடு குறைந்தபட்சம் மதிப்பெண்கள் எடுத்தால்தான் தமிழ்நாடு அரசுப் பணிகளில் வேலை வழங்கப்படும். அதற்கு ஏற்ப தற்போது பல விவாதங்கள், சட்ட வல்லுநர்கள் ஆலோசனைப்படி தெளிவாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணிகளில் எந்தத் தேர்வுகளாக இருந்தாலும் (டி.என்.பி.எஸ்.சி., வனத் துறை சார்ந்த தேர்வு என அனைத்திலும்) முதல் அடிப்படைத் தேவை தமிழ்ப்புலமை. தமிழ்நாடு குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். அதில் 40 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும். அப்படி இருந்தால்தான் பிற பாடங்கள் கருத்தில் கொள்ளப்படும்.
இதேபோல குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளில் முன்னர் இருந்த ஆங்கிலம் தாள் நீக்கப்பட்டு, தமிழ் தாள் வைக்கப்படும். இதிலும் 40 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும். முக்கிய நோக்கம் என்னவென்றால் தமிழ் அரசுப் பணியில் அமருபவர்கள், தினமும் தமிழ்நாடு மக்களை அணுகக்கூடியவர்கள். பத்தாம் வகுப்பில் தமிழ் மொழி பாடத்தில் 40 விழுக்காடு மதிப்பெண் இல்லையென்றால், அவர்கள் அரசுப் பணி பொறுப்புகளுக்குத் தகுதி உடையவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.
இந்தத் துறையில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எங்களைப் பொறுத்தவரை அடிப்படையில் இந்த சிஸ்டமில் மாற்றம் தேவை இருக்கு. அடிப்படை மாற்றத்திற்குத் தற்போதுதான் சிறந்த நேரம். தமிழ்நாடு அரசுப் பணியில் 14 - 16 லட்சம் இடங்கள் உள்ளன.
பணியாளர்கள் ஒன்பது லட்சம் பேர் உள்ளனர். அதிகளவில் காலி இடம் உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள நம்மிடம் நிதி இருக்கா என்றால் இல்லை. அது இரண்டாவது பிரச்சினை. முதலில் ஒட்டுமொத்த தேர்வு சிஸ்டம் மூலம் சிறந்த வெளிப்பாடு என்றால் 10,000 பேர் மட்டுமே வந்துள்ளனர்.
எல்லா துறையிலும் அதைவிட அதிகமாகத் தேவை இருக்கு. 70, 80 வகை தேர்வு நாம் நடத்துகிறோம். அது தேவையா? தற்போதைய சூழலுக்கு இந்த மாடல் சரிசெய்யப்பட வேண்டும். ஆலோசனை செய்கிறோம், நிறைய திருத்தம்வரும்.
தமிழ்நாடு கல்வித் திட்டம் நாட்டிலேயே சிறந்த திட்டம். கரோனாவுக்கு முன்புவரை அனைத்தும் நல்லபடியாக இருந்தது. ஆனால் பொதுவாக பிற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ்நாடு கல்வி நல்லா இருக்கு. இந்த அரசாணை மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.
அரசு அலுவலர்களுக்கு பணி வயது வரம்பு 60 ஆக அதிகரிப்பு செய்தது கடந்த அதிமுக ஆட்சியில். அரசுப் பணியில் வயது வரம்பு குறைப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழர்கள் எல்லா இடங்களிலும் முன்னேறி இருக்கிறார்கள். எட்டு கோடி பேரில், ஒன்பது லட்சம் பேர்தான் அரசுப் பணியில் உள்ளனர். அரசியல்வாதிகள் தற்காலிகம், அரசுப் பணியாளர்கள் நிரந்தரம். இது ரொம்ப முக்கியம்.
யார் தமிழர்கள் என்பது எப்படி சொல்வது? சிலர் 10 ஆண்டுகள் முன்பு இங்கு வந்து தமிழ் படித்திருப்பார்கள். அவர்கள் தமிழர்கள்தான். வெறும் பெயர், இருப்பிடம் வைத்து யார் தமிழர்கள் என்று சொல்ல முடியாது. அரசுத் தேர்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகள் நடக்காததால், வயதுவரம்பு அதிகரிக்கப்படும். எந்த ஒரு தேர்வு முறையும் மனிதனின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது அநியாயம். அதற்காகத் தான் நீட் தேர்வை நாங்கள் எதிர்த்தோம்.
மத்திய அரசின் தேர்வுகளில் மண்டலம் வாரியாகத் தேர்வுகள் நடத்தப்படும்போது, தமிழ்நாட்டிலிருந்து 500 முதல் 800 பேர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். தற்போது அதன் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
மத்திய அரசிடம் இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசுப் பணிகளிலும் தமிழர்களுக்கு முன்னுரிமைகள் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைவைப்போம். மத்திய அரசுப் பணிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக நமது பங்களிப்பு குறைந்துள்ளது, இதைச் சரிசெய்வோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹஜ் பயண மையங்களில் சென்னை நிராகரிப்பு: சு. வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு