மத்திய தொல்லியல் துறையின் இரண்டாண்டு முதுகலை பட்டயப்படிப்பிற்கு, செம்மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டு, சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் மற்றும் அரபு மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொல்லியல் அறிஞர்கள், தமிழறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ் - தமிழர் நலன் புறக்கணிப்பைத் தொடர்ந்து வரும் இந்திய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனத்திற்கு எதிராக அனைவரும் இணைந்து குரல் எழுப்புவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “இந்திய கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்ய அமைத்த 16 பேர் கொண்ட குழுவில் தமிழர்கள் உள்ளிட்ட தென்னகத்தினரை புறக்கணித்தார்கள், கண்டித்தோம்.
தற்போது, இந்தியாவின் தொல்லியல் சான்றுகளில் 60% மேலான சான்றுகளை கொண்ட தமிழை திட்டமிட்டு தவிர்த்து, தமிழ் மொழி மீது பண்பாட்டு படையெடுப்பை நிகழ்த்தியுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல், கடந்த 10 ஆண்டுகளாகவே மாநிலத்தில் ரயில்வே, மின் வாரியம், ஆயுத தொழிற்சாலை உள்ளிட்டவைகளில் வடமாநிலத்தவர் பெருமளவில் நியமிக்கப்பட்டு, தமிழர் நலன் அடியோடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடிமை அதிமுக அரசும் துணை போகின்றது “ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொல்லியல்துறையில் தமிழுக்கு இடமில்லையா? - வைகோ கண்டனம்