சென்னை தாம்பரம் சானடோரியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இங்கு பணிபுரியும், நான்கு துப்புரவு தொழிலாளர்கள், இரண்டு பட்டமேற்படிப்பு மாணவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, ஆறுபேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சித்த மருத்துவமனை உள் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் முகாமிட்டு பொது மக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக, இயக்குநர் மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.
அதேசமயம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு, அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.