தியாகராய நகர் மூசா தெருவில், ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜேந்திர குமார், அவரது மகன்கள் தருண், பரிஸ் ஆகியோர் தங்கம் மற்றும் வைர நகை மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர். இங்கு நேற்று முன்தினம் இரவு (அக்டோபர் 20) ரூ.2.50 கோடி மதிப்பிலான 4.5 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் திருடுபோனதாக, ராஜேந்திர குமார் தி.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். பின்னர் உதவி ஆணையர்கள் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, முகக்கவசம் அணிந்த ஒரு நபர் சுவர் ஏறி குதித்து, நகைகளை திருடி வருவதும், பின்னர் தெருமுனையில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொரு நபருடன் அவர் தப்பிச்செல்வதும் பதிவாகியுள்ளது. மேலும், சிசிடிவியில் பதிவான கொள்ளையர்களின் படங்களை, சென்னையில் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிப்போர் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்த்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், படங்கள் ஒத்துப்போன மூன்று பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்களிடம், கொள்ளையடிக்கப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்ட கைரேகை பதிவுகளை ஒப்பிட்டும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவரிடம் ரூ.7.5 லட்சம் திருடி பப்ஜி விளையாடிய சிறுவன்...!