உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பாக மயிலாப்பூரில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை இயக்குநர் சைலேந்திர பாபு, கூடுதல் இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன், மாநில பயிற்சி மைய இயக்குநர் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் தீயணைப்பு துறை காவலர்களின் குழந்தைகளுடன் சேர்ந்து மரக்கன்றுகளை சைலேந்திர பாபு நட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சைலேந்திர பாபு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றியும், கரோனா விழிப்புணர்வு குறித்தும் குழந்தைகள், பொதுமக்களிடம் உரையாடினார். மேலும், சரியான பதில் சொல்லும் குழந்தைகளுக்கு மரக்கன்றுகளையும் அவர் பரிசாக வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், ” தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். அதேபோல் பறவைகள் மற்றும் விலங்குகளின் தேவைக்காக, அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தண்ணீர் வைப்பதற்கான பாத்திரங்களை விலங்குகள் நல ஆர்வலர், சாய் விக்னேஷ் வழங்கியுள்ளார். இதேபோல் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் செயலாற்ற வேண்டும் ” என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: வாக்கி டாக்கி முறைகேடு: அமைச்சர் ஜெயக்குமார் உடந்தையா?