கரோனா வைரஸ் பரவல் காரணமாக உணவு டெலிவரி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வருவாய் குறைந்ததாலும், பல இடங்களில் டெலிவரி செய்தவர்கள் மூலமாக கரோனா வைரஸ் பரவியதாலும் மக்கள் ஆன்லைன் மூலம் உணவுப் பொருள்கள் வாங்குவதை வெகுவாகக் குறைத்து வருகின்றனர்.
இதனால் ஏராளமான இடங்களில் மிகப் பெரிய டெலிவரி கட்டமைப்பு, பணியாட்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்கும் நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்துவருகின்றன.
இந்த காரணத்தினால் ஸ்விக்கி நிறுவனமும் தனது தொழில் திட்டங்களை மாற்றியுள்ளது. நஷ்டம் ஏற்படும் இடங்களில் சேவையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கிளவுடு கிச்சன் திட்டங்களையும் தள்ளிவைத்துள்ளது. தற்போதைய சூழலில் மக்கள் அதிகளவு மளிகை பொருள்களை ஆர்டர் செய்வார்கள்.
இதன்மூலம் உணவு டெலிவரியால் ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஸ்விக்கி மளிகை சாமான் டெலிவரியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. உணவு டெலிவரி போல் இல்லாமல் மளிகைப் பொருள்கள் டெலிவரி செய்வது சற்று சவால் நிறைந்த பணியாக இருக்கும் என, தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதாவது ஒரு கடையில் வாடிக்கையாளர் கேட்கும் பொருள்கள் இருக்கிறதா என நிகழ் நேரத்தில் தகவலறிந்து ஆர்டர்களை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற குறிப்பிட்ட பகுதி சார்ந்த தகவல்களைப் பெறுவதற்காக சென்னையில் அதிநவீன தொழிட்நுட்ப மையத்தை ஸ்விக்கி தொடங்கியுள்ளது.
இங்கு செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் போன்ற தொழில்நுட்பம் மூலமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் மக்கள் எவ்வாறு இணையதளம் மூலமாக மளிகைப் பொருள்களை வாங்குகிறார்கள், எந்தெந்த பகுதிகளில் இணையதளம் மூலமாக வாங்கப்படுகிறது, எங்கிருந்து அவர்களுக்கு பொருள்களை வழங்க வேண்டுமென கண்டறியவுள்ளனர். கரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்கள் இணையதளம் மூலம் மளிகை சாமான்கள் வாங்குவது வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், இந்தச் சந்தையை கைப்பற்ற பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுவருகின்றன.
இதையும் படிங்க: