சென்னை: ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த குப்புசாமி - பிரியங்கா தம்பதிக்கு கடந்த 2017ஆம் ஆண்டு திருமணமான நிலையில் சாய்ராம் (3) என்ற மகன் உள்ளார். குப்புசாமி கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.
இரண்டாம் திருமணம்:
இதனால் பிரியங்கா கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு டேவிட் வினோத் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். இதையடுத்து டேவிட், பிரியங்கா, சாய்ராம் மூவரும் ராயப்பேட்டையிலுள்ள புதுப்பேட்டைப் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 30ஆம் தேதி சிறுவன் சாய்ராம் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, முதல் கணவரான குப்புசாமியின் உறவினர்களுக்கு தொலைபேசி வாயிலாக பிரியங்கா கூறியுள்ளார்.
சிறுவன் உயிரிழப்பில் சந்தேகம்:
தகவலறிந்த உறவினர்கள் ராயப்பேட்டை மருத்துவமனை சென்று பார்த்த போது, பிரியங்கா டேவிட் இருவரும், சிறுவன் மாடியிலிருந்து விழுந்து இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். ஆனால் அதுபோன்ற எந்த காயங்களும் சிறுவனின் உடலில் இல்லாததால், சிறுவனின் உயிரிழப்பில் சந்தேகமுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக ராயப்பேட்டை காவல் துறையினர் டேவிட்டை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிரியங்காவைக் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து சிறுவன் சாய்ராம் படியிலிருந்து விழுந்து இறந்தானா அல்லது கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.