சென்னை: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சுஷில் ஹரி பள்ளி நிறுவனரான சிவசங்கர் பாபா சிபிசிஐடி காவல் துறையினரால் டெல்லியில் கைதுசெய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளியின் ஆசிரியைகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, "சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளைத் தொடுவது, கட்டிப்பிடிப்பது ஆகியவை அனைவரும் முன்னிலையில் மட்டுமே நடக்கும், தனியாகவோ மறைவாகவோ நடப்பதில்லை. குழந்தைககளை பாபா தாத்தாவைப் போல் தொடுவார். ஆனால் அது நல்ல தொடுதல். கட்டிப்பிடிப்பார்; ஆனால் அது பெற்றோர்கள் முன்னிலையில்தான்" எ விளக்கம் அளித்தனர்.
சிவசங்கர் பாபா மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்பதெல்லாம் அப்பட்டமான பொய் என்றும், போக்சோ வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஆசிரியை பாரதி தங்கள் பள்ளியில் தற்போது பணிபுரியவில்லை எனவும், 10 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பணியில் இருந்து நின்று விட்டதாகவும் தெரிவித்தனர்.
பள்ளியில் வேலை பார்க்காத ஒருவரை எப்படி போக்சோ சட்டத்தின்கீழ் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தார்கள் எனக் கேள்வியெழுப்பினர். தொடர்ந்து பேசிய அவர்கள், பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்வது குறித்த எந்த அறிவிப்பும் தங்களது பள்ளிக்கு இதுவரை வரவில்லை எனவும், சுஷில் ஹரி பள்ளி பாபாவின் பெயரிலேயே இல்லை என்றும் ஆசிரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
"சிவசங்கர் பாபா குறித்த தகவல் வெளியான பின்பு ஒரு சில ஆசிரியர்கள் சொந்த காரணத்துக்காக மட்டுமே பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். பாபாவின் பள்ளிக்கு வந்த அலுவலர்களுக்குத் தேவையான விளக்கங்களைக் கொடுத்ததாகவும், பாபாவின் இடத்தைக் கூறியதே நாங்கள்தான்; தப்பிச் சென்றதாகவும், விரட்டிப் பிடித்ததாகவும் தவறான தகவல்கள் பரவிவருகின்றன.
சிபிசிஐடி விசாரணை நடந்துவருகிறது. எனவே பாபா குறித்து வதந்திகள் பரப்புவது நிறுத்தப்பட வேண்டும், வதந்திகளால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளோம். 2001ஆம் ஆண்டு நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்டது சுஷில்ஹரி பள்ளி. இங்கு பெற்றோர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது தவறான தகவல்; பள்ளிக்குள் பெற்றோர்கள் வருவது வழக்கமான ஒன்றுதான்.
பள்ளி நேரம் முடிந்த பிறகோ, பள்ளி நேரத்தின்போதோ அல்லது பள்ளியின் இடைவெளி நேரத்தின்போதோ பாபாவை பார்க்க வேண்டுமென மாணவ மாணவிகள் துடிப்பார்கள். அதற்கு நாங்கள் அனுமதி அளித்திருக்கிறோம்.
ஆனால் பாபா பள்ளி நேரத்திலோ, பள்ளி வகுப்புகள் நடைபெறும்போதோ, மாணவ மாணவிகளைக் கட்டிப் பிடித்தது இல்லை, இரண்டு தரப்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறான கருத்துகளை உள்நோக்கத்துடன் வெளியிட்டுவருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இது குறித்த முழு வீடியோ காண்க...
இதையும் படிங்க: சிவசங்கர் பாபா சொகுசு அறைக்கு சீல்!