சென்னை
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹியின் பெயரை கொலிஜீயம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தவர் வி.கே. தகில் ரமாணி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் அவர் மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொலிஜீயத்தில் முறையிட்டார். எனினும் அவரின் இடமாற்றம் திரும்ப பெறவில்லை. இதையடுத்து அவர் தனது பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதற்கு விளக்கம் அளித்த கொலிஜீயம், நீதிமன்றத்தில் சிறியது, பெரியது இல்லை. இது வழக்கமான நடவடிக்கை. இதனை நீதிபதி தகில் ரமணி மதிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் தகில் ரமாணி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அப்பதவிக்கு தற்காலிக நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டார். உயர்நீதிமன்ற வழக்குகளை அவர் விசாரித்து வந்தார்.
இந்த நிலையில் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான ஏ.பி. சாஹியின் பெயரை, சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு கொலிஜீயம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை மீது குடியரசுத் தலைவர் விரைவில் முடிவெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.