சென்னை: இந்தாண்டு 2022-2023 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளியான நிலையில், நீட் தேர்வுக்காக எங்கும் தனியார் பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் தனது கடின உழைப்பால் முதல் முயற்சியிலேயே வீட்டிலிருந்தபடியே குரோம்பேட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் வெற்றிப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
அகில இந்திய அளவில் 17,64,571 பேர் இந்தாண்டு நீட் தேர்வை எழுதியவர்களில் 9,93,069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1,32,167 பேர் தேர்வு எழுதியதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1,22,995 மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.அகில இந்திய அளவில் தேர்ச்சி சதவிகிதம் அதிகமாக இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
இந்தநிலையில் குரோம்பேட்டை அரசு பள்ளி மாணவன் நீட் தேர்வில் முதல் முயற்சியிலே 503 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி-ஜெயலட்சுமி தம்பதியரின் இரண்டாவது மகன் சௌந்தரராஜன். இவர் குரோம்பேட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும்போது மாவட்ட அளவில் 576 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.
முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி: ஒரு சிறிய வீட்டில் வசித்து வரும் இவர்கள் தனது மகனை சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவில் படிக்க வைத்து வந்துள்ளனர். இதனால், மாணவன் சுந்தர்ராஜன் தனக்கு கிடைக்கும் நேரங்களையெல்லாம் படிப்பில் மட்டும் செலுத்தி வந்ததன் பயனாக இந்தாண்டு நீட் தேர்வில் வெற்றிப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவன் சௌந்தரராஜனுக்கு ஒரு சகோதரர், சகோதரி உள்ளனர். சகோதரர் இயற்பியல் துறையில் படித்து வருவதால் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சௌந்தரராஜனுக்கு இயற்பியல் சம்பந்தமான படங்களை கற்றுக் கொடுத்து உதவியுள்ளார்.
503 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி: இந்தநிலையில் நீட் பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே படித்து வந்த மாணவன் சுந்தர்ராஜன், நீட் தேர்வில் முதல் முயற்சியிலே, 720 மதிப்பெண்களுக்கு 503 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இதனால் மாணவன் சுந்தர்ராஜன் மற்றும் அவர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து மாணவர் சுந்தர்ராஜன் ஈடிவி பாரத் ஊடகத்திடம் அளித்த பேட்டியில், 'சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பில், நான் 475 மதிப்பெண் பெற்று எங்கள் பள்ளியில் முதலிடம் பிடித்தேன். பன்னிரண்டாம் வகுப்பில் 576 மதிப்பெண் எடுத்து மாவட்டத்தில் முதலிடம் பிடித்தேன். எனக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்று கனவு இருந்தது. எனது தாய், தந்தையின் விருப்பமும் அதுவாகவே இருந்தது.
பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் கிடைத்த வெற்றி: இதனால், தன்னை நீட் தேர்வுக்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு கடினமாக படித்தேன். நீட் பயிற்சி மையங்களுக்கு செல்லவில்லை; வீட்டில் இருந்தே தான் அனைத்தையும் படித்தேன். பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது, கரோனா காரணமாக பள்ளிகள் இல்லாத காரணத்தினால் தனக்கு கிடைத்த அந்த நேரத்தை பயன்படுத்தி, நீட் தேர்வுக்காக என்னை தயார்படுத்தினேன். நீட் தேர்வின் முதல் முறையாக தேர்வு எழுதி 503 மதிப்பெண் எடுத்து உள்ளேன். அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு இருப்பதால் எனக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
நீட் தேர்வில் சாதித்த அரசு பள்ளி மாணவர்: நான் நீட் தேர்வுக்கு நன்றாக தயாராகிதான் தேர்வு எழுதினேன். ஆனால், 25 வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தது. இதனால், என்னால் கூடுதலான மதிப்பெண் எடுக்க முடியவில்லை. இன்னும் நீட் பயிற்சி மையத்திற்கு சென்று நன்றாக படித்து இருந்தால் இன்னும் அதிக அளவில் மதிப்பெண் எடுத்திருப்பேன். நீட் தேர்வு தர வரிசை பட்டியலில் சென்னை அரசு மெடிக்கல் கல்லூரி கிடைக்கும் என கூறுகின்றனர். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நீட் அச்சம் எதற்கு;தன்னம்பிக்கை போதும்: அரசு பள்ளி மாணவர்களும் இதுபோன்று சாதிக்க முடியும். இன்னும் அதிகமான அரசு பள்ளி மாணவர்கள் வரவேண்டும். நீட் தேர்வை கண்டு அச்சப்படாமல் தன்னம்பிக்கையுடன் படித்தால் தேர்ச்சி பெற முடியும். சென்னை அரசு மெடிக்கல் கல்லூரி கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்' என்றார் மகிழ்ச்சியுடன்.
இது குறித்து மாணவரின் தந்தை பாலாஜி ஈடிவி பாரத் ஊடகத்திடம் அளித்த பேட்டியில், 'என் மகன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் குடும்பம் மட்டுமல்லாமல் எங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எங்கள் கிராமத்தில் முதல் மாணவனாக மருத்துவம் படிக்க செல்கிறார். இதனால், எங்களுக்கு மட்டுமல்லாமல் எங்கள் கிராமத்திற்கே இது பெருமை. என் தந்தைக்கு சாராயம் குடித்து கண் பார்வை இழந்து 22 வருடங்களாக மருத்துவம் பார்க்க முடியாமல் கஷ்டப்பட்டோம். இதனால், என் குடும்பத்தில் இருந்து ஒருவரை மருத்துவராக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது.
விடா முயற்சியே காரணம்: அதற்கு பெரிய அளவில் நான் வசதியாக இல்லையென்றாலும், எனது மகனின் மருத்துவர் கனவிற்கு என்னால் முடிந்த அளவிற்கு பல உதவிகளை செய்தேன். இந்த நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்ததற்கு எனது மகனின் விடாமுயற்சியே முக்கிய காரணம்' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழக அளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து மதுரை மாணவர் சாதனை..